Saturday, 29 October 2016

நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் - டாக்டர் அம்பேத்கர்

நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் - டாக்டர் அம்பேத்கர்

"தலித் முரசு" கடந்த 16-அக்டோபர்-2016 அன்று நடந்தேறிய "மக்கள் மருத்துவர்கள்" பௌத்தம் திரும்பும் விழாவில், "நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தினை வெளியிட்டுள்ளனர்.

மதமாற்றம் குறித்து அண்ணலின் உரைகள் அடங்கிய தொகுப்பாய் அமைந்துள்ளது இப்புத்தகம்.

இப்புத்தகத்தில் டாக்டர் அம்பேத்கரின், 
  1. இயோலா உரை ( 13.10.1935 )
  2. கல்யாண் உரை ( 17.05.1936 )
  3. தாதர் உரை ( 31.05.1936 )
  4. பாந்தரா உரை ( 28.08.1937 )
  5. நாக்பூர் உரை ( 15.10.1956 )
மற்றும்,

  • புத்த தம்மம் வர்ண தர்மம் ( 17.05.1941 )
  • மானுடத்தை விடுவிக்கும் தம்மம் ( 1950 )

அமைந்துள்ளன.  மேலும், பின் இணைப்புகளாக,

  • டாக்டர் அம்பேத்கர் ராக்வபகதூர் எம்.சி.ராஜாவுக்கு அளித்த பதில் ( 15.08.1936 )
  • பவுத்த ஏற்பு உறுதிமொழிகள் ( 14.10.1956 ) 

ஆகிவை அமைந்துள்ளன.

இவையனைத்தும் கிட்டத்தட்ட அண்ணலின் அனைத்து விளக்கங்கள், பதில்களை கொண்டுள்ளவையாய் அமைந்துள்ளது.  அண்ணல் பௌத்தமேற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பௌத்தமேற்பு பற்றிய விழிப்புணர்வு பெறுகி வரும் இக்காலத்தில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது மிகவும் வரவேற்க தக்கது.

தாதரில் அண்ணல் ஆற்றிய ( 31.05.1936 ) "முழு விடுதலைக்கான வழி" என்ற உரை கிட்டத்தட்ட மதமாற்றம் குறித்த அனைத்து விளக்கங்களையும், பதில்களையும் கொண்டுள்ளது என்றால் மிகையில்லை.  

அதேபோல் "மானுடத்தை விடுவிக்கும் தம்மம்" ( 1950 ) என்ற படைப்பு, பௌத்தத்தையும் மற்ற மதங்களையும் ஒப்பிட்டு பௌத்தமே சிறந்ததென நிறுவுகிறார்.  மேலும் பவுத்த நெறியைப் பரப்ப நம்முன்னால் உள்ள குறிக்கோள்களையும் பகிர்கின்றார்.

அண்ணலின் பவுத்தம் ஏற்பு பற்றி புரிந்து கொள்ள, மக்களிடம் அவரின் கருத்துகளை கொண்டு செல்ல இப்புத்தகம் ஒரு அருமையான ஒரு படைப்பு.


புத்தகம் :  நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்  
ஆசிரியர் : டாக்டர் அம்பேத்கர் 
மொழிபெயர்ப்பு : தாயப்பன் அழகிரிசாமி
வெளியீடு : தலித் முரசு  
பக்கங்கள் : 150
விலை : ரூ.150/-

Monday, 24 October 2016

நீயே புத்தர்தான்!

நீயே புத்தர்தான்

ஜென் குருவிடம் ஒருவர் வந்தார்.  அவர் நேரடியாக அந்தக் குருவிடம் "என்னைப் புத்தராக்கி விடுங்கள்" என்று வேண்டி நின்றார்.

குரு அவர் இப்படிக்கு கேட்டதும் 'பளார்' என்று அவருடைய கன்னத்தில் அறைந்தார்.  இதனால் அவருக்குப் பொறி கலங்கியது போல இருந்தது.  தலைச் சுற்றி கீழே விழுந்தும் விட்டார்.  எழுந்து அமர்ந்தவர் அருகில் இன்னொரு சீடனிடம் புலம்பினார்.

"நான் என்ன தவறு செய்து விட்டேன்? குரு இப்படி அறைந்து விட்டாரே!"

அதற்கு அந்த சீடன் சொன்னான்.

"நீ கேட்டது தவறுத்தான்.  புத்தரை புத்தராக்கு என்று கேட்டால் யாருக்குத்தான் கோபம் வராது.  உன் அதிர்ஷ்டம் உன்னை அறைந்ததோடு குரு விட்டு விட்டார்".

யாரும் புத்தராக ஆக்கப்படுவதில்லை.  தானே தான் ஆக வேண்டும், தானே தான் புத்தர் என்கிற உண்மையினை அவர் உணர்ந்து கொண்டார்.

Wednesday, 19 October 2016

தாய் மதம் திரும்பிய 50 மருத்துவர்கள்

தாய் மதம் திரும்பிய 50 மருத்துவர்கள்

16 அக்டோபர் 2016 பௌத்தத்தின் எழுச்சி வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும் என்றால் மிகையில்லை.

"மக்கள் மருத்துவர்கள்" என்ற அமைப்பு சுமார் 5 மாதங்களுக்கு முன் 8 பேர் கொண்ட மருத்துவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. தகவல் தொடர்பு வசதிகளினால் இப்போது 400 மருத்துவர்களுக்கு மேலாய் ஒன்றிணைந்துள்ளனர்.  

அவர்களின் பல விவாதங்களுக்கு பிறகு, அண்ணல் அம்பேத்கரின் வழியில் தீண்டாமையிலிருந்து விடுபட தாய் மதமான பௌத்தம் திரும்புவதே சரியான வழி என்று முடிவெடுத்து 48 மருத்துவர்கள் தங்கள் குடும்பத்துடன் ( மனைவி, பிள்ளைகள் ) பௌத்தமேற்க்கும் நிகழ்வை 16 அக்டோபர் 2016 அன்று நிகழ்த்துவதாய் முடிவெடுத்தனர்.

அதன்படி நிகழ்ச்சி கிட்டத்தட்ட 09:30 மணியளவில் தொடங்கியது.
மேடையை பேராசிரியர் பி.டி.சத்யபால், தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன், பௌத்த துறவி வெண் தம்மனாக், மருத்துவர் ஜெயராமன் ஆகியோர் அலங்கரித்தனர்.

மக்கள் மருத்துவக் குழு பற்றிய சிறு  விளக்கத்திற்குப் பின், பேராசிரியர் பி.டி.சத்யபாலின் உரை அரங்கேறியது.   அவரின் சிறப்பான உரையிலிருந்து சில :

*அண்ணல் அம்பேத்கர் அவரின் பௌத்தமேற்புக்கு பின்னரே பௌத்தமதத்தைப் பின்பற்றினார் என்று கூறுவது முறையல்ல.  மாறாக அவர் வெகு காலமாக பௌத்தத்தை தன்னுடைய தனி வாழ்வில் பின்பற்றினார்.  

*அண்ணலுக்கு பௌத்தம் அறிமுகமாகியது அவருடைய 10ம் வகுப்பு வெற்றி விழாவின் போது.  
அந்நிகழ்விற்கு தலைமையேற்ற தாதா கெலுஸ்கர்  அவருக்கு பௌத்தரைப் பற்றிய  அவறெழுதிய புத்தகத்தைப் பரிசளித்தார். 

*அதன் மூலம் பௌத்தர் அறிமுகமானார் அண்ணல் அம்பேத்கருக்கு.    
அதற்கு பின் தொடர்ந்து பௌத்தத்தைப் பற்றி தொடர்ந்து ஆராய்ந்து கொண்டும் தன தனிவாழ்வில் பௌத்தத்தை கடைப்பிடக்கவும் ஆரம்பித்தார். 

*சென்னையில் ஒரு கூட்டத்தில் அயோத்திதாசர் கட்டிய 17 கோவில்களை பற்றி வினவினார். 
என்று பல செய்திகளைப் பகிர்ந்தார்.

உணவு இடைவேளைக்குப் பின், பௌத்தம் பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.அதன் பின், நிகழ்ச்சியின் முத்தாய்ப்பான மூன்று நிகழ்வுகள் நடந்தேறின.

அண்ணல் அம்பேத்கரின் பௌத்தமேற்பு பற்றிய 6 உரைகள் அடங்கிய புத்தகத்தை "நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்" என்று தலைப்பிட்டு தலித் முரசு வெளியிட்டது.

நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன் 


விழாக் குழுவின் பங்களிப்பால் ரூ.150/- விலையிலான அப்புத்தகம் ரூ.50/- க்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் கிட்டத்தட்ட 72 நபர்கள் பௌத்தம் ஏற்கும் நிகழ்வு நடந்தேறியது.

அதன் பிறகு பாபாசாகேப் டாக்டர்.அம்பேட்கரின் எழுத்துக்களை தமிழல் படிக்கும் வண்ணம் மக்கள் மருத்துவர்கள்  குழுவால் உருவாக்கப்பட்ட ஆன்டிராய்டு ஆப்பான "BLUE BUDDHA" வெளியிடப்பட்டது. இதில் மொத்தமுள்ள 37 தொகுதிகளில் முதல்கட்டமாக 10 மட்டும் படிக்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒரு சமூகத்தில் கற்றறிந்த மருத்துவர்களின் செயல்கள் கூர்ந்து கவனிக்கப்படும்.  அவர்களின் இத்தகைய தாய் மதம் திரும்புதலால், ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்த அடித்தட்டு மக்களுக்கு பௌத்தத்தின் பால் கவனம் திரும்பும் என்றால் மிகையில்லை.  இந்த நிகழ்வின் மூலம் அது சாத்தியமாகும் என்றே எண்ணலாம்.

மேலும் இந்த நிகழ்வைப் பற்றிய செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது முதல் பக்கத்திலேயே செய்தியை வெளியிட்டு சிறப்பித்தமை கூடுதல் சிறப்பு.

அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசர் வழியே நம் மக்கள் மீண்டும் பௌத்தத்தை மீட்டெடுப்பர் என்பது நிதர்சனம்.இந்து மதத்தில் இருக்கும் வரை தீண்டாமை தொடரும். 

நமோ புத்தா

Sunday, 16 October 2016

அம்பேத்கரின் பௌத்தம் செழித்திருந்தால் இந்தியா எப்படி இருந்திருக்கும்?

இந்து மதத்துடன் தனக்குள்ள எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ள விரும்புவதை 1935 அக்டோபர் மாதத்திலேயே வெளிப்படுத்தினார் அம்பேத்கர்

ஒருவேளை, அம்பேத்கர் மேலும் சில ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்திருந்தால் என்னவாகியிருக்கும்? லட்சக்கணக்கில் அல்ல, பல லட்சக்கணக்கில் மக்கள் புத்த மதத்துக்கு மாறத் தொடங்கியிருந்தால், அது இந்தியாவின் சமூக, அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டிருக்கும்.

நான் மிகவும் விரும்பிப் படித்த நாளிதழ் இப்போது வெளிவருவது இல்லை. ‘பம்பாய் கிரானிகில்’ என்ற அந்த நாளிதழ் இந்தியர்களால் நடத்தப்பட்டது. பிரிட்டிஷ்காரர்களுக்குச் சொந்தமான, பிரிட்டிஷ்காரர்களுக்குத் தேவைப்படும் செய்திகளைப் பிரசுரித்துவந்த ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டது.

20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் பம்பாய் என்பது, வசிப்பதற்கும் தொழில் செய்வதற்கும் மிகவும் உற்சாகமான நகரமாக இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் வணிகத் தலைநகரமாகவும், தேசிய அரசியலின் மையமாகவும், திரைப்பட உலகின் களமாகவும், வேறு பல விஷயங்களுக்கு முக்கியக் கேந்திரமாகவும் திகழ்ந்தது. அந்தக் காலத்துக்கே உரிய உற்சாகமான தருணங் களும், தீவிரமான கணங்களும் ‘பம்பாய் கிரானிகில்’ இதழில் விளக்கமாகப் பதிவுசெய்யப்பட்டன. அந்நாளிதழுக்குச் சிறந்த நிருபர்கள் பலரும், மிகச் சிறந்த இரு ஆசிரியர்களும் இருந்தனர். நாளிதழின் தொடக்கக் காலத்தில் பி.ஜி. ஹார்னிமன் என்பவரும், 1920, 1930-களில் எஸ்.ஏ.பிரெல்வி என்பவரும் ஆசிரியர்களாக இருந்தனர்.

60 ஆண்டுகளுக்கு முன்னால்…

பி.ஆர்.அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியைக் கட்டுரை யாக எழுத வேண்டும் என்று தீர்மானித்தபோது, ‘பம்பாய் கிரானிகில்’ நாளிதழையே ஆதாரத் தகவல்களுக்காக நான் தேர்வுசெய்தேன். பொதுவாழ்வில் அம்பேத்கர் ஈடுபட்ட நாள் முதல், அவரைப் பற்றிய செய்திகளைத் தவறாது பிரசுரித்துவந்த அந்நாளிதழ், அவருடைய வாழ்நாளின் கடைசி முக்கிய நிகழ்ச்சியை எப்படிப் பிரசுரித்திருந்தது என்பதை அறிய வேண்டும் என்ற ஆவலும் என்னிடம் சேர்ந்துகொண்டது. ஹார்னிமேன், பிரெல்வி இருவரும் இறந்த பிறகும் அந்நாளிதழ் வெளியானது. மகாராஷ்டிர மாநிலத்தின் நாகபுரி நகரில் 14-10-1956 ஞாயிற்றுக்கிழமை, அதாவது இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்னால், இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினார் அம்பேத்கர். (அந்த இடம்தான் ‘தீட்சா பூமி’.) பத்திரிகையில் வெளியான செய்திக்குச் செல்வதற்கு முன்னால் சிறிய விளக்கம் தர விரும்புகிறேன்.

1935 அக்டோபர் மாதம், குஜராத் மாநிலத்தின் ‘கவிதா’ என்ற கிராமத்தில், தங்களுடைய குழந்தைகளையும் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் பாடம் சொல்லித்தருமாறு ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று ஆதிக்கச் சாதியினரால் ஒதுக்கப்பட்ட மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆதிக்கச் சாதியினர் இதைப் புறக்கணித்ததோடு எதிர்வினைகளிலும் இறங்கியிருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட அம்பேத்கர், “நாம் வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், இப்படி நடத்தும் துணிச்சல் அவர்களுக்கு இருந்திருக்காது” என்று கூறினார். “உங்களுக்குச் சம அந்தஸ்தும், சம மரியாதையும் அளிக்கும் எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்து அதற்கு மாறிவிடுங்கள்” என்று தன்னுடைய தொண்டர்களுக்கு உடனே அறிவுறுத்தினார். அம்பேத்கரின் ஆலோசனைப்படி, தாழ்த்தப்பட்ட மக்களின் கூட்டம் நாசிக் நகரில் நடந்தது. ‘இந்து மதத்திலிருந்து வெளியேறி, சம அந்தஸ்து தரும் பிற மதத்தைத் தழுவுங்கள்’ என்று கோரும் தீர்மானம் ஒன்று அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்து மதத்துடன் தனக்குள்ள எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ள விரும்புவதை 1935 அக்டோபர் மாதத்திலேயே வெளிப்படுத்தினார் அம்பேத்கர். அதற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு அவருக்கு 21 ஆண்டுகள் பிடித்துள்ளன. ஏன்? அதற்கும் முன்னால், அவ்வாறு மதம் மாறுவதைத் தவிர்த்து, சம உரிமை பெற வேறு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று ஆராய அத்தனை ஆண்டுகள் பிடித்துள்ளன. அது மட்டுமல்லாமல் அன்றாடம் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியதாக இருந்த சீர்திருத்தம், பிரதிநிதித்துவம் போன்றவற்றின் மீதும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

தாமதம் ஏன்?

அம்பேத்கர், “இந்து மதத்திலிருந்து வெளியேறுவேன்” என்று கூறியதும் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அவருடன் தொடர்புகொண்டனர். அவ்விரண்டும் இந்தியாவில் தோன்றிய மதங்கள் அல்ல என்பதால் அவர்களுடைய அழைப்புகளை அம்பேத்கர் நிராகரித்தார். சீக்கிய மதத்தில் சேருவது பற்றிச் சில காலம் பரிசீலித்தார். அங்கும் இந்து மதத்தைப் போல சாதிப் பிரிவுகள் இருக்கின்றன என்பதை அறிந்ததும் அந்த முடிவைக் கைவிட்டார்.

இந்தத் தேடல் தொடர்ந்தது. 1940-கள் முதல் புத்த மதத்தின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். புத்த மதக் கருத்துகளைப் படிப்பதையும் அவை பற்றி எழுதுவதையும் தீவிரப்படுத்தினார். 1954-ல் பர்மா தலைநகர் ரங்கூனில் நடந்த உலக புத்தமத மாநாட்டில் பங்கேற்றார். இக்காலத்தில் அவர் புத்த மதத்தில் சேருவது என்ற முடிவை எடுத்துவிட்டார். அவரது அரசியல், சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளும், உடல் நலத்தில் ஏற்பட்ட பின்னடைவும் மதமாற்ற நிகழ்ச்சியைத் தாமதப்படுத்திவந்தன.

அக்டோபர் பதினான்கும் அம்பேத்கரும்

1956 மே மாதம், ‘புத்தமும் தம்மமும்’ என்ற நூலை எழுதி முடித்து, அதை அச்சுக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு, புத்த மதத்தில் சேருவது என்ற முடிவை முறைப்படி அறிவித்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த நகரம் நாகபுரி. அங்கு அவருக்கு விசுவாசமிக்க தொண்டர்கள் ஏராளம். அக்டோபர் 14-ம் நாள் ஞாயிற்றுக்கிழமையை அதற்காகத் தேர்வுசெய்தார். அந்த ஆண்டு இந்து பஞ்சாங்கப்படி அந்த நாள் விஜய தசமி ஆகும்.

நாகபுரிக்கு ‘பம்பாய் கிரானிகல்’ நாளிதழின் நிருபர் அன்று அதிகாலையிலேயே சென்று விட்டார். மத மாற்ற நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே அம்பேத்கரின் ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பு’ அலுவலகத்துக்கு வெளியே, தங்களுடைய பெயரைப் பதிவுசெய்துகொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) பிற்பகலில் இருந்தே நகருக்குள் வரும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் இதர வாகனங்கள் மூலம் ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர். எல்லா வாகனங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

‘தீட்சா பூமி’யில் மக்கள்

திட்டமிட்டபடி அக்டோபர் 14-ம் நாள் மதமாற்ற நிகழ்ச்சி நடந்தது. அடுத்த நாள் அந்நாளிதழின் முதல் பக்கத்திலேயே அச்செய்தி மிகப் பெரிதாக இடம்பெற்றது. ‘காலையிலிருந்தே ஆயிரக்கணக்கான மக்கள் அலையலையாக ‘தீட்சா பூமி’யில் வந்து குவிந்தனர். வீதிகளெங்கும் மக்களால் நிரம்பி வழிந்ததால் வாகனப் போக்குவரத்து அடியோடு நின்றது. உலகின் எந்தப் பகுதியிலும் இப்படியொரு நிகழ்ச்சி நடந்ததில்லை என்று கூறுமளவுக்கு, நகருக்கு வெளியே பத்து லட்சம் சதுர அடிப் பரப்பில் நடந்த அந்நிகழ்ச்சியில், எந்தப் பக்கம் திரும்பினாலும் மனிதத் தலைகளே கடலலையைப் போல விரவிக் கிடந்தன’ என்று வர்ணித்திருக்கிறார் செய்தியாளர். அன்றைய தினம் மட்டும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மதம் மாறினர்.

அம்பேத்கரும் அவருடைய மனைவி சவிதா பாயும் முதலில் நின்றனர். பர்மாவைச் சேர்ந்த 83 வயது புத்தத் துறவி சந்திரமணி அவர்களைப் புத்த மதத்துக்கு வரவேற்றார். உறுதிமொழியை அவர் சொல்லச் சொல்ல, மற்றவர்கள் அதையே திரும்பக் கூறி புதிய மதத்தில் சேர்ந்தனர். பிறகு, அம்பேத்கர் அதே உறுதிமொழியைக் கூற, தீட்சா பூமியில் திரண்டிருந்த அனைவரும் மராத்தி மொழியில் அதையே திரும்பக் கூறி உறுதியேற்றனர்.

வரலாற்று நிகழ்வு

அம்பேத்கர் அப்போது தூய வெண்ணிற ஆடை அணிந்திருந்தார். மனைவியுடன் அவர் நிகழ்ச்சி மேடைக்குச் சென்றபோது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் உற்சாகக் குரல் விண்ணை நிறைத்தது. நூற்றுக்கணக்கான கேமராக்கள் அப்போது பளிச்சிட்டு வரலாற்று நிகழ்வைப் பதிவுசெய்துகொண்டன.

அம்பேத்கரும் அவருடைய தொண்டர்களும் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் சுருக்கம்: “தீண்டாமையைக் கடைப்பிடிக்க மாட்டேன், அனைத்து மனித உயிர்களையும் சமமாக மதிப்பேன். என்னுடைய அன்றாட வாழ்க்கையில் கொல்லாமை, களவு செய்யாமை, புலனடக்கம், கள்ளுண்ணாமை, பொய்யுரைக்காமை எனும் பஞ்ச சீலத்தைக் கடைப்பிடிப்பேன். ‘அறிவு, கருணை, கடமை என்ற முந்நெறிகளை அடிப்படையாகக் கொண்ட பெளத்தமே உண்மையான மதம் என்று நம்புகிறேன். இந்து மதத்தைக் கைவிட்டு புத்த மதத்தைத் தழுவியதன் மூலம் மறு பிறவியை அடைகிறேன்.”

இந்து மதத்தில் ஏதுமில்லை

இதற்கு மறுநாள், அக்டோபர் 15 அன்று மிகப் பெரிய பொதுக்கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், புத்த மதத்தைத் தழுவியது ஏன் என்பதை விளக்கினார். “மனித குலம் எப்போதுமே தன்னுடைய நடத்தை, செயல்பாடுகள் குறித்து சுயமாக சிந்தித்துப் பார்த்து அவற்றை மேம்படுத்திவந்துள்ளது. பொருளாதாரரீதியாக முன்னுக்கு வருவதும், சட்டமியற்றும் அதிகாரங்களைக் கொண்ட சட்டப் பேரவை, நாடாளுமன்றம் போன்றவற்றில் நம்மவருக்குப் பிரதிநிதித்துவம் கிடைப்பதும் முக்கியம் என்றாலும், அனைத்து வகையிலான முன்னேற்றத்துக்கு மத நம்பிக்கை மிக மிக அவசியமாகும். இந்து மதத்தின் வறட்டுக் கொள்கைகள், ஹரிஜனங்களின் உயர்வுக்கு மிகப் பெரிய தடைக்கல்லாக இருக்கின்றன (ஹரிஜனங்கள் என்ற சொல்லை அம்பேத்கர் பயன்படுத்தவில்லை, ஆனால் பத்திரிகையில் அப்படிப் பதிவாகியிருக்கிறது). பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்களைத் தவிர மற்றவர்கள் உற்சாகமடைய இந்து மதத்தில் ஏதுமில்லை. எனவேதான், மிக முக்கியமான இந்த முடிவை எடுத்து, புதிய மத நம்பிக்கையை ஏற்க நேர்ந்தது.”

புத்த மதம் பிறந்தது இந்தியாவில்தான் என்றாலும், அது பிறந்த நாட்டில் செல்வாக்கின்றி மருகியது. அதே வேளையில், தென் கிழக்காசிய நாடுகளில் தழைத்தோங்கியது. எனவே, வெளிநாட்டுச் செல்வாக்கால் இந்த மதத்துக்கு மாறினீர்களா என்று சிலர் கேட்கக்கூடும் என்பதை ஊகித்து, “இந்தப் புதிய மதத்துக்கு ஆதரவு காட்டும் விதத்தில் உதவிகள் செய்யுங்கள் என்று அந்நியர்களைக் கேட்க மாட்டேன். மற்றவர்கள் பணம் கொடுப்பார்கள் அல்லது கொடுக்காமல் இருப்பார்கள். ஆனால், இந்நாட்டு மக்கள் மீது நான் நம்பிக்கை வைக்கிறேன்” என்று பேசியிருக்கிறார். “உங்களுடைய வருமானத்திலிருந்து 5%-ஐ சமூகப் பணிக்கும் புதிய மதத்துக்கும் கொடுப்பது என்று நீங்கள் முடிவுசெய்தால், இந்தப் புதிய மதமானது இந்த நாட்டை மட்டுமல்ல, உலகம் முழுவதையுமே உயர்த்திவிடும்” என்று பேசியிருக்கிறார்.

அக்டோபர் 14 ஏன்?

புத்த மதத்துக்கு மாற அக்டோபர் 14-ஐ ஏன் தேர்வுசெய்தார் என்ற கேள்வி எழுகிறது. அது ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாள் என்பதால் தன்னுடைய ஆதரவாளர்களால் எளிதில் வர முடியும் என்று தீர்மானித்தாரா? இந்து மத நம்பிக்கைகள்படி விஜய தசமி என்பது தீமையை நன்மை வெற்றி கண்ட நாள். சாதிப் பாகுபாட்டையும் தீண்டாமையையும் கடைப்பிடிக்கும் தீமைகள் நிறைந்த இந்து மதத்தை வெற்றி காண பெளத்தமே சிறந்தது என்பதை அடையாளப்படுத்த அந்த நாளைத் தீர்மானித்தாரா? இந்துக்களால் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட தங்களுடைய மக்களுக்கு மத அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற நாள் என்ற அடையாளத்துக்காக அந்நாளைத் தேர்ந்தெடுத்தாரா என்ற கேள்விகள் எழுகின்றன. அம்பேத்கருக்கு நெருக்கமான வட்டாரங்கள்கூட இதற்கு விளக்கம் தரவில்லை.

புத்த மதத்தில் சேர்ந்த அடுத்த ஏழாவது வாரத்தில் அம்பேத்கர் காலமானார். ஒருவேளை, அம்பேத்கர் மேலும் சில ஆண்டுகள் நல்ல ஆரோக் கியத்துடன் வாழ்ந்திருந்திருந்தால் என்னவாகி யிருக்கும்? இன்னும் ஒரு பத்தாண்டுகள் அவர் வாழ்ந்திருந்தால் அவருடைய பேச்சு, எழுத்து, செயல்பாடுகள் காரணமாக ஈர்க்கப்பட்டு மேலும் பல லட்சம் ஒடுக்கப்பட்ட மக்கள் புத்த மதத்தைத் தழுவியிருப்பார்கள். லட்சக்கணக்கில் அல்ல, பல லட்சக்கணக்கில் மக்கள் புத்த மதத்துக்கு மாறத் தொடங்கியிருந்தால், அது இந்தியாவின் சமூக, அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டிருக்கும்.

மதம் மாறிய சில வாரங்களுக்கெல்லாம் அம்பேத்கர் மறைந்ததுதான் பெரிய சோகம். அவர் மேலும் பத்து அல்லது பதினைந்து ஆண்டு கள் வாழ்ந்திருந்து கோடிக்கணக்கான இந்தியர்களை பெளத்தத்தின் பக்கம் ஈர்த்திருந்தால் சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்து மதமே மேலும் சீர்திருந்தி, சாதிரீதியிலான ஏற்றத் தாழ்வுகளைக் கைவிடவும், கண்மூடித்தனமான பல பழக்கங்கள் மண்மூடிப் போகவும்கூட வழியேற்பட்டிருக்கும். இந்திய மக்களை உய்விக்க வந்த மாபெரும் சீர்திருத்தவாதியின் மறைவால், இந்துக்களான நாம் மீண்டும் பழைய, சாதியக் கண்ணோட்டம் மிக்க பாரபட்சமான மனநிலையிலேயே உறைந்துவிட்டோம்.

எழுத்து : ராமசந்திர குஹா
தமிழில் சுருக்கமாக: சாரி

அம்பேத்கர் மதம் மாறிய நிகழ்வின் 60-வது ஆண்டுFriday, 14 October 2016

பா.இரஞ்சித் தயாரிக்கும் ஆவணப்படம்! #BewareOfcastes
2010 ஆம் ஆண்டு, ஏப்ரல், 19 ஆம் தேதி... ஹரியானா மாவட்டத்தில் இருக்கும் மிர்ச்பூர் என்ற சிறிய கிராமம். ஆதிக்க சாதியான ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சிலர் நடந்து போய்க் கொண்டிருந்தனர். அங்கு ஒரு நாய் அவர்களை நோக்கி குரைத்தது. முதலில் அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... ஆனால், அந்த நாய் ஒரு தலித்தினுடையது என்பது தெரிந்ததும் அவர்களுக்கு கோபம் தலைக்கேறியது. சாதி, மத பேதங்கள் தெரியாத, இன, மொழி அடையாளங்கள் அற்ற, நன்றியுள்ள நாயாக இருப்பினும்... அது தலித் வளர்ப்பதால் இவர்களுக்கு எதிரி தான். அதை  கொல்லும் நோக்கில் கல்லை எறிகிறார்கள். ஒரு தலித் சிறுவன் அந்த நாயைக் காக்க முற்படுகிறான்... அவ்வளவு தான். அந்த கிராமமே பற்றி எரியத் தொடங்குகிறது...

இந்தக் கலவரத்தில் 70 வயதான தாரா சந்த் என்ற தலித் முதியவரும், அவரின் மாற்றுத் திறனாளி மகள் சுமனும் (16)... உயிரோடு எரிக்கப்படுகிறார்கள். நெருப்புடன் போராட முடியாமல், அதற்கு தலைவணங்கி தங்கள் சாம்பலை ஆதிக்க சாதியினருக்கு வெற்றிப் பரிசாகத் தருகிறார்கள். 52 பேர் படுகாயம், 18ற்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்டன என பல வலிகளை விட்டுச் சென்றது இந்த சம்பவம். மனிதம் மறந்த, மறுத்த இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய "நீலம்" ப்ரொடக்‌ஷன்ஸ் மூலம் ,ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித்.

சில மாதங்களுக்கு முன்பு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் முகாமில் பங்கேற்ற ரஞ்சித் உங்கள் படங்களில் சாதியம் அதிகம் பேசப்படுவது ஏன் என்ற கேள்விக்கு...

" சாதி அழிக்கணும்னு நினைக்குற எண்ணம் நம் எல்லாருக்குமே இருக்கு. சமூகப் பிரச்சனையப் பேசாத எந்தவொரு ஆர்ட்டுமே, ஆர்ட்டில்லைங்குறது என்னோட கருத்து. நான் எங்கே போனாலும், எனக்கு முன்னாடி சாதி அங்க நிக்குது...சாதிய எண்ணங்கள வேரறுக்கும் வகையில் முன்னெடுப்புகளை மேற்கொள்ளணும். முதல்ல மனுஷன மனுஷனா மனுஷன் மதிக்கணும்..." என்று சொல்லியிருந்தார்.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவரின் " சாதிகள் ஜாக்கிரதை ( BEWARE OF CASTES )" என்ற ஆவணப்படத்தின் ட்ரெய்லர்... அவரின் முன்னெடுப்பிற்கான முயற்சியாகவே இருக்கிறது..

இந்தக் குறும்பட வெளியீடும், திரையிடல் 15-அக்டோபர்-2016 அன்று சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேப்ஸில் நடக்க இருக்கின்றது.    இந்நிகழ்ச்சி குறித்து மேலுமறிய இங்கே சொடுக்கவும்.

நன்றி : ஆனந்த விகடன் 

Thursday, 13 October 2016

தமிழ் சினிமா - புனைவில் இயங்கும் சமூகம்

தமிழ் சினிமா - புனைவில் இயங்கும் சமூகம்

சினிமா மீதான விமர்சனங்கள் என்பது வெறும்கதை, கதை சொல்லப்பட்டமுறை, அதன் வெகுஜனரசிப்புத் தன்பாய், சுவாரசியம் என மேம்போக்கான அம்சங்களை விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுவதைக்காட்டிலும் திரைப்படத்தின் நோக்கம், உள்ளடக்கம், அது வெளிப்படுத்தும் கருத்து, பார்வையாளரிடம் ஏற்படுத்தும் உணர்வு, அதன் குறியீட்டுத்தன்மை   என வெவ்வேறு தளங்களில் அதனை ஆய்வுக்குட்படுத்துவது சமூகத்தின் பிரதிபலிப்பாகவும், அதில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாகவும் விளங்கும் 'சினிமா' எனும் பிரும்மாண்டக் கலைக்கு மிக அவசியமானது எனும் நிலையில்தான் திரு. ஸ்டாலின் ராஜாங்கத்தின் திரைப்படங்களின் மீதான ஆய்வும்  விமர்சனமும் பெரிதும் வரவேற்பிற்குள்ளாகிறது.

மையநீரோட்டத் திரைப்படங்களில் அல்லது வெகுஜனப் பார்வையாளர்களை சென்றடையக்கூடிய திரைப்படங்களில் அதன் அரசியல் தன்மை, உள்ளடக்கம், எளிய மக்களை காட்சிப்படுத்துவதன் தன்மை என்று ஒவ்வொரு கூறுகளையும் கவனமாக ஆய்ந்து, பொதுவெளியில் விசாரணைக்குட்படுத்தும் இவருடைய விமர்சனநோக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

விமர்சனம் என்ற ஆகப்பெரிய கலையை நன்குணர்ந்து, ஒரு திரைப்படத்தின் ஒட்டுமொத்தத் தன்மையை ஆய்வுக்குட்படுத்தி விவாதத்திற்கு கொண்டுபோகும் இவருடைய விமர்சனங்களால் ஈர்க்கப்பட்ட நான், மற்ற திரைப்படங்களை நோக்கி இவர் எழுப்பும் கேள்விகளை, விமர்சன ஆய்வை என்னுடைய திரைப்படங்களின் திரையாக்கத்தின்போது கவனத்தில் கொண்டே செயல்படுகிறேன்.

சமூகத்தின்மீதான் அக்கறையும் எளியமக்களைத் தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிப்படுத்துவதையும் ஆய்வுக்குட்படுத்தும் இவருடைய விமர்சனநோக்கு இச்சமூகத்திற்கும் எதிர்வரும் திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.

~ பா.ரஞ்சித், திரைப்பட இயக்குனர்

புத்தகம் :  தமிழ் சினிமா - புனைவில் இயங்கும் சமூகம் 
ஆசிரியர் : ஸ்டாலின் ராஜாங்கம்
பதிப்பகம் : பிரக்நை  
பக்கங்கள் : 176
விலை : ரூ.145/-
ISBN :  978-81-930764-0-8


Tuesday, 11 October 2016

மக்கள் மருத்துவர்கள் பௌத்தம் திரும்பும் விழா - 2016

மக்கள் மருத்துவர்கள் பௌத்தம் திரும்பும் விழா - 2016

ஜெய் பீம்

மக்கள் மருத்துவர்கள் அமைப்பு சார்பாக பௌத்த கருத்தரங்கம் மற்றும் பௌத்தம் திரும்புதல் விழா 16.10.2016 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.

மக்கள் மருத்துவர்கள் அமைப்பு இந்தியா முழுமையும் உள்ள பட்டியல் பிரிவு மருத்துவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கிலும்  பாபாசாகேப் டாக்டர்.அம்பேட்கரின் கருத்துக்களை அனைவருக்கும் எடுத்துசெல்லும் நோக்கிலும் நமது சமூகத்திற்கு பல வகையில் துணையாக இருக்கும் நோக்கிலும்  உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு சமத்துவத்தை ஏற்று பூர்வீக பௌத்தர்களாக உயர்ந்த கலாச்சரத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் சதியால் வீழ்த்தப்பட்டு பின்னர் ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டு, நமது கலாச்சாரம் முழுமையும் அழிக்கப்பட்டு, தீண்டாமை புறவயமாக  (objective) கடைபிடிக்கப்பட்டு பின்னர் தீண்டதகாதவர்களாக  ஆக்கப்பட்டோம் என்பது வரலாறு.

பாபாசாகேப் டாக்டர்.அம்பேட்கர் இந்த வரலாற்றை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்து நாம் அனைவரும் பூர்வீக பௌத்தர்கள் என்று பிரகடணப்படுத்தினார். "இந்துவாக பிறந்த நான் இந்துவாக சாக மாட்டேன்" என்று சூளுரைத்து லட்சக்கணக்கானோருடன்  பௌத்தம் திரும்பினார்.

மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மூலம் தீண்டாமை கடைபிடிப்பதை குற்றமென அறிவித்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பூர்விக பௌத்தர்களுக்கு இட ஒதுக்கீட்டையும் உறுதி செய்தார். "சமத்துவம்,சகோதரத்துவம்,சுதந்திரம்" இதுவே மனித குலம் பின்பற்ற வேண்டிய தாரக மந்திரம் என்றும் புத்தரின் தம்மம் இதனடிப்படையில் அமைந்த பகுத்தறிவு வாழ்க்கை முறை எனவும் உறுதிபட கூறினார். இவ்வாறு இந்தியாவில் அழிக்கப்பட்ட பௌத்தத்தை மீட்டதன் மூலம் 'போதிசத்துவர்' என்றும் அவர் மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்.

இந்த கருத்தரங்கமானது 'இந்திய பூர்வீக பௌத்தர்களின்' வரலாறு, பௌத்த தத்துவங்கள்,வாழ்க்கை முறை ஆகியவை குறித்து அனைவரும் புரிந்து கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியர்.டாக்டர்.சத்தியபால் அவர்கள் இது குறித்து விளக்கமான உரை நிகழ்த்துவார். அதனை தொடர்ந்து டாக்டர்கள் மற்றும் இதர பலர் பௌத்தம் திரும்பும் நிகழ்வும் நடைபெற உள்ளது. தலித்முரசு ஆசிரியர் திரு.புனி்தபாண்டியன் அவர்களும் கலந்து கொள்கிறார்.

பூர்வீக  பௌத்தர்களான நாம் கலாச்சார சார்புக்காக இந்துக்களை சார்ந்திருப்பதால் தான் தீண்டாமை தொடர்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி பொருளாதாரம் இவையாவும் தீண்டாமையை ஒழிக்கவல்லதல்ல என்பது நிறுபிக்கப்பட்ட வரலாற்று உண்மையாகும். ஆகவே பாபாசாகேபின் வழியில் நாம் நமது பூர்வீக மதமான பௌத்தம் திரும்பி கலாச்சார சுய சார்பை மீட்பதே தீண்டாமையிலிருந்து விடுபட ஒரே தீர்வு.

"எனது மக்கள் இந்தியாவில் பௌத்தத்தை மீள் கட்டமைப்பு செய்ய எதையும் தியாகம் செய்வார்கள்" என்று அண்ணல் அன்று கூறியதை இவ்விடத்தில் மீண்டும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.

விழாவில் பங்கேற்க அனைவரையும் வரவேற்கிறோம்.

நமோ புத்தா

Saturday, 8 October 2016

தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது - கவிதாயினி உமாதேவி

 தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது - கவிதாயினி உமாதேவி
பவுத்த அடையாளங்களை மீளுருவாக்கம் செய்கிற உமாதேவியின் கவிதைகள் பணப்பாட்டு இயக்கங்களைத் தீவிர நிலைக்கு அழைத்துச் செல்கின்றன.  இவர் கவிதைகளின் அணுகுமுறை வாழ்க்கை முரண்பாடுகளாலானது என்ற புத்தரின் உண்மையைப்போல் வெளிப்படையானது.  பதம் குலையாத பவுத்த பாதையைத் தேர்ந்தேடுத்துக்கொண்ட உமாதேவி, பூர்வீக பவுத்தப் பெண்ணியத்தில் தேறிக்கொண்டிருக்கும் தேரி.  மறக்கப்பட்ட மணிமேகலையின் அட்சய பாத்திரத்திலிருந்து, சமூக நோய்க்கு மருந்தாகின்றன இவரது கவிதைகள் .
 ~ பாரதிபிரபு 

புத்தகம்: தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
வகை: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : கவிதாயினி உமாதேவி
பதிப்பகம் : காலச்சுவடு
பக்கங்கள் : 64
விலை : ரூ: 75/-
ISBN : 978-93-5244-030-6

கவிதாயினி உமாதேவி

கவிதாயினி உமாதேவி 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் அத்திப்பாக்கம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.  பெற்றோர் து. குப்பன் - சு. இந்தியராணி அம்மாள்.

"பண்டைய இலக்கியங்களில் அறநெறிகளை குண்டலகேசியும்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.  தற்போது உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

"மெட்ராஸ்" திரைப்படத்தின் மூலமாகப் பாடலாசிரியராகித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்.  சிற்றிதழ்கள், வெகுசன இதழ்களில் கவிதை, கட்டுரை மூலமும் பள்ளிகள், கல்லூரிகள், சமூக விடுதலை இயக்கங்களின் இலக்கிய மேடைகள் மூலமும் பெண்ணிய பவுத்தச் சிந்தனைகளை விதைத்துக்கொண்டு வருபவர்.

இவரது படைப்புகள் :

1) திசைகளை பருகியவள்
2) தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது

Friday, 7 October 2016

முடிவெடுப்பது அவர்களது சுதந்திரம்! - பாடலாசிரியர் உமாதேவி

பாடலாசிரியர் உமாதேவி அவர்களை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.

தமிழிற்கு வழக்கொழிந்த வார்த்தைகளை திரை இசைப் பாடல்கள் மூலம் மீட்டெடுப்பவர்.  பௌத்த நெறியாளர்.  பௌத்தமும் அவரால் மீட்டெடுக்கப் படுகிறது என்றால் மிகையில்லை.

"வாழ்வை மாற்றிய புத்தகம்" என்ற தலைப்பில் "அவள் விகடன்"ல் வெளிவந்த பேட்டி இது.பாடலாசிரியர் உமாதேவி - அண்ணலின் "புத்தமும் அவர் தம்மமும்"  புத்தகத்துடன்.

“செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துக்கொண் டிருந்த காலம்... ஔவையாரின் கவிதைகளும் இலக்கியப் புத்தகங் களும் அப்போதுதான் எனக்கு அறிமுகமாகத் தொடங்கியிருந்தன. பேராசிரியர் அமைதி அரசு ஒரு படைப்பை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை அத்தனை அழகாகக் கற்றுத்தருவார்.சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., தமிழ் இலக்கியம் படிக்க வந்த பிறகு பேராசிரியர் சொல்லித் தந்த விஷயங்களை நடைமுறையில் உணர்ந்தேன். ஒரு விஷயத்தை ‘நீ இப்படிப் பார்... இப்படிச் செய்...’ எனச் சொல்வது வெறும் சத்தங்களாகவே இருக்கும். 


அதே விஷயங்கள் நம் கண்முன் நிற்கும்போது ஒரு பாதை தெரியும். அப்படி பாதைக்கும் சத்தத்துக்கு மான வித்தியாசத்தை எனக்கு உணர வைத்த புத்தகம் அம்பேத்கர் எழுதிய ‘புத்தரும் அவர் தம்மமும்’.


நாம் இதுவரை அறிந்த புத்தரின் வாழ்க்கைக்கும் இந்தப் புத்தகத்தில் நான் படித்த அவரது வாழ்க்கைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனேன்.


கைக்குழந்தையுடன் மனைவி யசோதரையை விட்டுவிட்டு புத்தர் துறவறம் போனதை மிகப்பெரிய துரோகச் செயல் என்கிற பேச்சாடல்கள் இன்றும் உண்டு. ஒரு மரணத்தையும் ஒரு நோயாளியையும் ஒரு வயதானவரையும் பார்த்துதான் துறவற முடிவை எடுத்ததாகப் படித்திருப்போம். ஒரு மனிதனைத் துறவறம் பற்றி யோசிக்க வைக்க இந்த மூன்று மட்டுமே காரணங்கள் ஆகிவிடாது என்கிற அம்பேத்கர், அவற்றை ஆழமாக அலசுகிறார். புத்தர் சித்தார்த்தனாக இருந்த குழந்தைப் பருவத்தில் இருந்தே அவர் பார்த்த, அவரைப் பாதித்த பல விஷயங்களை அவரது துறவறத்தின் பின்னணியில் குறிப்பிடுகிறார்.

புத்தன்

அப்போது சாக்கியர்கள், கோலியர்கள் என இரு   இனக்குழுக்கள் இருந்தன. புத்தரின் அம்மா கோலியர் இனத்தைச் சேர்ந்தவர். அப்பா சாக்கியர் இனத்தைச் சேர்ந்தவர். இன்று காவிரிக்காக நாம் அடித்துக் கொள்கிற மாதிரி அன்று ரோகிணி நதிக்காக சண்டை போட்டனர். அன்றும் நதிநீர் பங்கீடுதான் பிரச்னை. 


சாக்கியர் இனக்குழுவினருக்கு ஒரு சங்கம் இருந்தது. அரசனும் அதற்குக் கட்டுப்பட்டவன். 20 வயதுக்கு மேலான ஆண்கள் அனைவரும் அதில் உறுப்பினர்களாக வேண்டும்.  உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ரோகிணி நதி தொடர்பான விவாதம் சங்கத்தில் நடக்கிறது. தண்ணீர் தர மறுக்கும் கோலியரை எதிர்த்து போர் தொடுப்பது என சங்கம் முடிவு செய்கிறது. இம்முடிவுக்குக் கட்டுப்படாத வர்களுக்கு நாடு கடத்துதல், சொத்துகளைப் பறிமுதல் செய்தல், மரணதண்டனை வழங்குதல் என இம்மூன்றில் ஒரு தண்டனை நிச்சயம்.

‘ஒரு போர் இன்னொரு போரையே உருவாக்கும்... நீதிக்கோ, அன்புக்கோ வழிவகுக்காது’ என்கிறான் சித்தார்த்தன். அந்த வரிகள் என் வாழ்க்கையை திசை திருப்பியவை. தமிழ் இலக்கியப் படிப்புக்காக சங்க இலக்கியங்களை வாசித்துக்கொண்டிருந்த நேரம் அது.  சங்க இலக்கியங்களில் போரில் வெல்கிறவன், தோற்றவர்களின் மனைவிகளை, மகள்களை கொண்டுவந்து அந்தப்புரத்தில் அடைத்து வைப்பது பற்றிப் படித்த எனக்கு சித்தார்த்தனின் போர் மறுப்பு தத்துவம் மனதைப் பாதிக்கிறது. போர் என்பது ஒரு பெண்ணுக்கு எத்தனை பெரிய இழப்பு என்பதை சித்தார்த்தனின் வரிகள் சொல்கின்றன. போரில் தன் வீட்டு ஆணை இழக்கிற பெண் அதற்குப் பிறகு எப்படி எல்லாவற்றையும் இழந்து நிற்கிறாள் என சித்தார்த்தன் கவலைகொள்கிறான். ‘போருக்கு உடன்பட மாட்டேன்’ என்கிறான். அப்படிஎன்றால் 3 விஷயங்களில் ஒன்றுக்கு அவன் உடன்பட்டாக வேண்டும். 


‘நான் ஏன் இறக்க வேண்டும்? உயிர் என்பது விலை மதிக்க முடியாதது’ என்கிறான் சித்தார்த்தனாகிய புத்தன். சொத்துகளை இழக்கவும் தயாராக இல்லை. பெண்களுக்கும் வயதான பெற்றோருக்கும் அது அவசியம் என்கிறான். கணவரின் முடிவைக் கேட்டு அவனை வாரி அணைத்து அத்தனை முத்தங்களை அள்ளிக் கொடுக்கிறாள் யசோதரை.


அப்போது நாடு கடத்தப்படுவது மட்டும்தான் ஒரே வழி என்கிற முடிவுக்கு வருகிறான். அதில் யசோதரைக்கு வருத்தமே...  ஆனாலும், ‘அப்படியொரு விதியை முன்வைத்த மனிதர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என புத்தி சொல்லக்கூடிய ஞானத்தைப் பெற்று தேர்ந்த புத்தனாக திரும்பி வா’ என இரும்பு மனுஷியாக கம்பீரக் காதலுடன் கணவனை வழியனுப்புகிறாள். 


அக்காலத்தில் துறவுநிலைக்கு மிஞ்சிய கவுரவம் வேறில்லை. துறவறத்துக்குக் கிளம்புகிற புத்தர் தன் நண்பர்களுடன் கடவுளைப் பார்க்கப் புறப்படுகிறார். முதலில் எதிர்கொள்பவர் கபிலன். தியானத்தில் இருந்தால் கடவுளைப் பார்க்கலாம் என்கிற கபிலரின் பேச்சைக் கேட்டு அப்படியே இருக்கிறார். வயிறு ஒட்டி, பலவீனமானதுதான் மிச்சம். கடவுள் வரவில்லை. கண்களைத் திறந்து, ‘கடவுள் வரமாட்டார், அவருக்காகக் காத்திருப்பது முட்டாள்தனம்’ என நினைத்துப் புறப்படுகிறார். பலவீனமடைந்து ஒரு அரசமரத்தடியில் களைப்புடன் படுத்துவிடுகிறார். சிறுதெய்வ வழிபாட்டுக்காக அங்கே வருகிற சுஜாதை என்கிற பெண், அரசமரத்தடி சாமிக்கு உணவு வைக்கும்போது புத்தருக்கும் தருகிறார்.  `அமர்ந்த நிலையில் அடைவது மட்டும் ஞானமில்லை... யாரோ ஒருவருக்கு யாரோ ஒருவர் உணவளிப்பதுதான் உண்மையான ஞானம்’ என உணர்கிறார் புத்தர். 


பெண்ணியத்துக்கான புத்தரின் குரலையும் நான் இந்தப் புத்தகத்தில் பார்த்தேன். பிறந்த 5-வது நாள் தன் அம்மா மகா மாயாவை இழந்து விடுகிற புத்தர், சித்தி கவுதமியிடம் வளர்கிறார். அவர்களது குல வழக்கப்படி புத்தரை வேட்டைக்குப் போகச் சொல்கிறார் சித்தி.  மறுக்கும் புத்தரிடம், ‘வேட்டைக்குப் போகாவிட்டால் நீ சத்ரியனே இல்லை’ என்கிறார். அதைக் கேட்டு தன் குலத்தையே தூக்கிப் போட்டவர் புத்தர். பின்னாளில் புத்தர் துறவியானதும் அதே சித்தி தன்னையும் அவருடன் இணைத்துக்கொள்ளக் கேட்டு தினமும் கெஞ்சுகிறார். புத்தரோ செவிமடுக்கவில்லை. புத்தரின் நெருங்கிய நண்பன் ஆனந்தன், ‘நீ செய்வது சரியா... ஆமாம், இல்லை என ஏதேனும் ஒரு பதிலைச் சொல்ல வேண்டாமா’ எனக் கேட்கிறார்.

‘அவரை துறவுக்கு வரச் சொல்ல நான் யார்? பெண் என்பவள் ஓர் ஆணைக்காக காத்திருக்கக்கூடாது. முடிவெடுப்பது அவர்களது சுதந்திரம்’ என்ற புத்தரின் வார்த்தைகளில் பெண்ணிய ஆதரவுக்கான குரலைப் பார்த்தேன்.

பாடலாசிரியர் உமாதேவி - அண்ணலின் "புத்தமும் அவர் தம்மமும்"  புத்தகத்துடன்

இப்படி இன்னும் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் எனக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதலை விசாலப்படுத்தியது என்றே சொல்லலாம். பதினோராம் வகுப்பு படித்தபோது நான் வாசித்த பெரியார் சிந்தனை நூலை அடிக்கடி நினைவுபடுத்திய புத்தகமும்கூட இது.  இன்று சிங்களவர் பேசும் பவுத்தத்துக்கு எதிரான கருத்துகளை நான் முன் வைக்கக் காரணமாக அமைந்ததும் இந்தப் புத்தகம்தான். புத்தருக்கு போதி மரம் மாதிரி எனக்கு இந்தப் புத்தகம்!’’

நன்றி : அவள் விகடன், 04.10.2016
பேட்டி: ஆர்.வைதேகி, படங்கள்: எம்.உசேன்

Wednesday, 5 October 2016

ஸ்டாலின் ராஜாங்கம்

Stalin Rajangam

ஸ்டாலின் ராஜாங்கம் 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் முன்னூர் மங்கலத்தைச் சேர்ந்த ஸ்டாலின் ராஜாங்கம் மதுரை  அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியர்.  தமிழ்ப் பௌத்தம்  பண்பாட்டு வரலாறு, தமிழக தலித் இயக்க வரலாறு, பண்பாட்டு ஆய்வுகள் சார்ந்து இயங்கி வருகிறார்.  தலித் விமர்சனம், இதழ், பாதிப்பு, தொகுப்பு, சிறுவெளியீடு என எழுதியும் செயற்பட்டும் வருகிறார்.  காலச்சுவடு இதழ் ஆசிரியர்  உறுப்பினர்.

மின்னஞ்சல் : stalinrajangam@gmail.com


புத்தகங்கள் :


அயோத்திதாசர் வாழும் பௌத்தம்

அயோத்திதாசர்  வாழும் பௌத்தம் 
ஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் ம்றுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வுவெளிச்சம்  பாய்ச்சும்  கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.

நவீனகாலத் தமிழ் சிந்தனைமீதும் செயல்பாடுகள்மீதும் மரபின் வேரிலிருந்து எழுந்துவந்து வினையாற்றிய அரிய மூலிகைச்செடியையொத்த அயோத்திதாசர் எனும் சிந்தனையாளரின் தனித்துவமான அவதானங்களை உரையாடல்களின்வழியே கண்டடைகிறது  இத்தொகுப்பு. நவீன மனப்பாங்கால் கண்டறிய முடியாத கோணங்களை அவற்றின் மறைவிலிருந்து விளக்கி விரிந்த பின்புலத்தில் வைத்து  அயோத்திதாசரை அவர் காலத்திலிருந்தும் சமகாலத்திலிருந்தும் மதிப்பிடுகிறது இத்தொகுப்பின் கட்டுரைகள்.

அயோத்திதாசரின் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு அவை உருவானவிதம், அவர் ஒன்றைப் புரிந்துகொண்ட - விளக்கியமுறை, அவற்றின் சமகாலப் பொருத்தம்  ஆகியவற்றையும் இக்கட்டுரைகளில் முன்வைக்கிறார் ஸ்டாலின்.   இதுவரை அயோத்திதாசர் சார்ந்து  கவனம்பெறாத பதிவுகளிலிருந்தும் முதன்முறையாக தரவுகளைத் திரட்டி எழுதப்பட்டிருப்பதும் இத்தொகுப்பின் தனித்துவம்.


புத்தகம் :  அயோத்திதாசர்  வாழும் பௌத்தம்
ஆசிரியர் : ஸ்டாலின் ராஜாங்கம்
பதிப்பகம் : காலச்சுவடு
பக்கங்கள் : 192
விலை : ரூ.175/-
ISBN : 978-93-5244-017-7

சாக்ய சங்கம்புத்தம் சரணம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமி! 
சங்கம் சரணம் கச்சாமி!

இம்மண்ணின் பூர்வ குடிகளான பஞ்சமர்களை வேர்களாய் ஒன்றிணைக்க விழுதுகளாய் பலம் பெற, கருத்தியல் ரீதியிலான பண்பாட்டு புரட்சியை முன்னெடுக்க எடுக்கப்படும் முயற்சி.