Sunday, 16 October 2016

அம்பேத்கரின் பௌத்தம் செழித்திருந்தால் இந்தியா எப்படி இருந்திருக்கும்?

இந்து மதத்துடன் தனக்குள்ள எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ள விரும்புவதை 1935 அக்டோபர் மாதத்திலேயே வெளிப்படுத்தினார் அம்பேத்கர்

ஒருவேளை, அம்பேத்கர் மேலும் சில ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்திருந்தால் என்னவாகியிருக்கும்? லட்சக்கணக்கில் அல்ல, பல லட்சக்கணக்கில் மக்கள் புத்த மதத்துக்கு மாறத் தொடங்கியிருந்தால், அது இந்தியாவின் சமூக, அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டிருக்கும்.

நான் மிகவும் விரும்பிப் படித்த நாளிதழ் இப்போது வெளிவருவது இல்லை. ‘பம்பாய் கிரானிகில்’ என்ற அந்த நாளிதழ் இந்தியர்களால் நடத்தப்பட்டது. பிரிட்டிஷ்காரர்களுக்குச் சொந்தமான, பிரிட்டிஷ்காரர்களுக்குத் தேவைப்படும் செய்திகளைப் பிரசுரித்துவந்த ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டது.

20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் பம்பாய் என்பது, வசிப்பதற்கும் தொழில் செய்வதற்கும் மிகவும் உற்சாகமான நகரமாக இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் வணிகத் தலைநகரமாகவும், தேசிய அரசியலின் மையமாகவும், திரைப்பட உலகின் களமாகவும், வேறு பல விஷயங்களுக்கு முக்கியக் கேந்திரமாகவும் திகழ்ந்தது. அந்தக் காலத்துக்கே உரிய உற்சாகமான தருணங் களும், தீவிரமான கணங்களும் ‘பம்பாய் கிரானிகில்’ இதழில் விளக்கமாகப் பதிவுசெய்யப்பட்டன. அந்நாளிதழுக்குச் சிறந்த நிருபர்கள் பலரும், மிகச் சிறந்த இரு ஆசிரியர்களும் இருந்தனர். நாளிதழின் தொடக்கக் காலத்தில் பி.ஜி. ஹார்னிமன் என்பவரும், 1920, 1930-களில் எஸ்.ஏ.பிரெல்வி என்பவரும் ஆசிரியர்களாக இருந்தனர்.

60 ஆண்டுகளுக்கு முன்னால்…

பி.ஆர்.அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியைக் கட்டுரை யாக எழுத வேண்டும் என்று தீர்மானித்தபோது, ‘பம்பாய் கிரானிகில்’ நாளிதழையே ஆதாரத் தகவல்களுக்காக நான் தேர்வுசெய்தேன். பொதுவாழ்வில் அம்பேத்கர் ஈடுபட்ட நாள் முதல், அவரைப் பற்றிய செய்திகளைத் தவறாது பிரசுரித்துவந்த அந்நாளிதழ், அவருடைய வாழ்நாளின் கடைசி முக்கிய நிகழ்ச்சியை எப்படிப் பிரசுரித்திருந்தது என்பதை அறிய வேண்டும் என்ற ஆவலும் என்னிடம் சேர்ந்துகொண்டது. ஹார்னிமேன், பிரெல்வி இருவரும் இறந்த பிறகும் அந்நாளிதழ் வெளியானது. மகாராஷ்டிர மாநிலத்தின் நாகபுரி நகரில் 14-10-1956 ஞாயிற்றுக்கிழமை, அதாவது இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்னால், இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினார் அம்பேத்கர். (அந்த இடம்தான் ‘தீட்சா பூமி’.) பத்திரிகையில் வெளியான செய்திக்குச் செல்வதற்கு முன்னால் சிறிய விளக்கம் தர விரும்புகிறேன்.

1935 அக்டோபர் மாதம், குஜராத் மாநிலத்தின் ‘கவிதா’ என்ற கிராமத்தில், தங்களுடைய குழந்தைகளையும் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் பாடம் சொல்லித்தருமாறு ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று ஆதிக்கச் சாதியினரால் ஒதுக்கப்பட்ட மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆதிக்கச் சாதியினர் இதைப் புறக்கணித்ததோடு எதிர்வினைகளிலும் இறங்கியிருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட அம்பேத்கர், “நாம் வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், இப்படி நடத்தும் துணிச்சல் அவர்களுக்கு இருந்திருக்காது” என்று கூறினார். “உங்களுக்குச் சம அந்தஸ்தும், சம மரியாதையும் அளிக்கும் எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்து அதற்கு மாறிவிடுங்கள்” என்று தன்னுடைய தொண்டர்களுக்கு உடனே அறிவுறுத்தினார். அம்பேத்கரின் ஆலோசனைப்படி, தாழ்த்தப்பட்ட மக்களின் கூட்டம் நாசிக் நகரில் நடந்தது. ‘இந்து மதத்திலிருந்து வெளியேறி, சம அந்தஸ்து தரும் பிற மதத்தைத் தழுவுங்கள்’ என்று கோரும் தீர்மானம் ஒன்று அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்து மதத்துடன் தனக்குள்ள எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ள விரும்புவதை 1935 அக்டோபர் மாதத்திலேயே வெளிப்படுத்தினார் அம்பேத்கர். அதற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு அவருக்கு 21 ஆண்டுகள் பிடித்துள்ளன. ஏன்? அதற்கும் முன்னால், அவ்வாறு மதம் மாறுவதைத் தவிர்த்து, சம உரிமை பெற வேறு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று ஆராய அத்தனை ஆண்டுகள் பிடித்துள்ளன. அது மட்டுமல்லாமல் அன்றாடம் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியதாக இருந்த சீர்திருத்தம், பிரதிநிதித்துவம் போன்றவற்றின் மீதும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

தாமதம் ஏன்?

அம்பேத்கர், “இந்து மதத்திலிருந்து வெளியேறுவேன்” என்று கூறியதும் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அவருடன் தொடர்புகொண்டனர். அவ்விரண்டும் இந்தியாவில் தோன்றிய மதங்கள் அல்ல என்பதால் அவர்களுடைய அழைப்புகளை அம்பேத்கர் நிராகரித்தார். சீக்கிய மதத்தில் சேருவது பற்றிச் சில காலம் பரிசீலித்தார். அங்கும் இந்து மதத்தைப் போல சாதிப் பிரிவுகள் இருக்கின்றன என்பதை அறிந்ததும் அந்த முடிவைக் கைவிட்டார்.

இந்தத் தேடல் தொடர்ந்தது. 1940-கள் முதல் புத்த மதத்தின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். புத்த மதக் கருத்துகளைப் படிப்பதையும் அவை பற்றி எழுதுவதையும் தீவிரப்படுத்தினார். 1954-ல் பர்மா தலைநகர் ரங்கூனில் நடந்த உலக புத்தமத மாநாட்டில் பங்கேற்றார். இக்காலத்தில் அவர் புத்த மதத்தில் சேருவது என்ற முடிவை எடுத்துவிட்டார். அவரது அரசியல், சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளும், உடல் நலத்தில் ஏற்பட்ட பின்னடைவும் மதமாற்ற நிகழ்ச்சியைத் தாமதப்படுத்திவந்தன.

அக்டோபர் பதினான்கும் அம்பேத்கரும்

1956 மே மாதம், ‘புத்தமும் தம்மமும்’ என்ற நூலை எழுதி முடித்து, அதை அச்சுக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு, புத்த மதத்தில் சேருவது என்ற முடிவை முறைப்படி அறிவித்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த நகரம் நாகபுரி. அங்கு அவருக்கு விசுவாசமிக்க தொண்டர்கள் ஏராளம். அக்டோபர் 14-ம் நாள் ஞாயிற்றுக்கிழமையை அதற்காகத் தேர்வுசெய்தார். அந்த ஆண்டு இந்து பஞ்சாங்கப்படி அந்த நாள் விஜய தசமி ஆகும்.

நாகபுரிக்கு ‘பம்பாய் கிரானிகல்’ நாளிதழின் நிருபர் அன்று அதிகாலையிலேயே சென்று விட்டார். மத மாற்ற நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே அம்பேத்கரின் ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பு’ அலுவலகத்துக்கு வெளியே, தங்களுடைய பெயரைப் பதிவுசெய்துகொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) பிற்பகலில் இருந்தே நகருக்குள் வரும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் இதர வாகனங்கள் மூலம் ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர். எல்லா வாகனங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

‘தீட்சா பூமி’யில் மக்கள்

திட்டமிட்டபடி அக்டோபர் 14-ம் நாள் மதமாற்ற நிகழ்ச்சி நடந்தது. அடுத்த நாள் அந்நாளிதழின் முதல் பக்கத்திலேயே அச்செய்தி மிகப் பெரிதாக இடம்பெற்றது. ‘காலையிலிருந்தே ஆயிரக்கணக்கான மக்கள் அலையலையாக ‘தீட்சா பூமி’யில் வந்து குவிந்தனர். வீதிகளெங்கும் மக்களால் நிரம்பி வழிந்ததால் வாகனப் போக்குவரத்து அடியோடு நின்றது. உலகின் எந்தப் பகுதியிலும் இப்படியொரு நிகழ்ச்சி நடந்ததில்லை என்று கூறுமளவுக்கு, நகருக்கு வெளியே பத்து லட்சம் சதுர அடிப் பரப்பில் நடந்த அந்நிகழ்ச்சியில், எந்தப் பக்கம் திரும்பினாலும் மனிதத் தலைகளே கடலலையைப் போல விரவிக் கிடந்தன’ என்று வர்ணித்திருக்கிறார் செய்தியாளர். அன்றைய தினம் மட்டும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மதம் மாறினர்.

அம்பேத்கரும் அவருடைய மனைவி சவிதா பாயும் முதலில் நின்றனர். பர்மாவைச் சேர்ந்த 83 வயது புத்தத் துறவி சந்திரமணி அவர்களைப் புத்த மதத்துக்கு வரவேற்றார். உறுதிமொழியை அவர் சொல்லச் சொல்ல, மற்றவர்கள் அதையே திரும்பக் கூறி புதிய மதத்தில் சேர்ந்தனர். பிறகு, அம்பேத்கர் அதே உறுதிமொழியைக் கூற, தீட்சா பூமியில் திரண்டிருந்த அனைவரும் மராத்தி மொழியில் அதையே திரும்பக் கூறி உறுதியேற்றனர்.

வரலாற்று நிகழ்வு

அம்பேத்கர் அப்போது தூய வெண்ணிற ஆடை அணிந்திருந்தார். மனைவியுடன் அவர் நிகழ்ச்சி மேடைக்குச் சென்றபோது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் உற்சாகக் குரல் விண்ணை நிறைத்தது. நூற்றுக்கணக்கான கேமராக்கள் அப்போது பளிச்சிட்டு வரலாற்று நிகழ்வைப் பதிவுசெய்துகொண்டன.

அம்பேத்கரும் அவருடைய தொண்டர்களும் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் சுருக்கம்: “தீண்டாமையைக் கடைப்பிடிக்க மாட்டேன், அனைத்து மனித உயிர்களையும் சமமாக மதிப்பேன். என்னுடைய அன்றாட வாழ்க்கையில் கொல்லாமை, களவு செய்யாமை, புலனடக்கம், கள்ளுண்ணாமை, பொய்யுரைக்காமை எனும் பஞ்ச சீலத்தைக் கடைப்பிடிப்பேன். ‘அறிவு, கருணை, கடமை என்ற முந்நெறிகளை அடிப்படையாகக் கொண்ட பெளத்தமே உண்மையான மதம் என்று நம்புகிறேன். இந்து மதத்தைக் கைவிட்டு புத்த மதத்தைத் தழுவியதன் மூலம் மறு பிறவியை அடைகிறேன்.”

இந்து மதத்தில் ஏதுமில்லை

இதற்கு மறுநாள், அக்டோபர் 15 அன்று மிகப் பெரிய பொதுக்கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், புத்த மதத்தைத் தழுவியது ஏன் என்பதை விளக்கினார். “மனித குலம் எப்போதுமே தன்னுடைய நடத்தை, செயல்பாடுகள் குறித்து சுயமாக சிந்தித்துப் பார்த்து அவற்றை மேம்படுத்திவந்துள்ளது. பொருளாதாரரீதியாக முன்னுக்கு வருவதும், சட்டமியற்றும் அதிகாரங்களைக் கொண்ட சட்டப் பேரவை, நாடாளுமன்றம் போன்றவற்றில் நம்மவருக்குப் பிரதிநிதித்துவம் கிடைப்பதும் முக்கியம் என்றாலும், அனைத்து வகையிலான முன்னேற்றத்துக்கு மத நம்பிக்கை மிக மிக அவசியமாகும். இந்து மதத்தின் வறட்டுக் கொள்கைகள், ஹரிஜனங்களின் உயர்வுக்கு மிகப் பெரிய தடைக்கல்லாக இருக்கின்றன (ஹரிஜனங்கள் என்ற சொல்லை அம்பேத்கர் பயன்படுத்தவில்லை, ஆனால் பத்திரிகையில் அப்படிப் பதிவாகியிருக்கிறது). பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்களைத் தவிர மற்றவர்கள் உற்சாகமடைய இந்து மதத்தில் ஏதுமில்லை. எனவேதான், மிக முக்கியமான இந்த முடிவை எடுத்து, புதிய மத நம்பிக்கையை ஏற்க நேர்ந்தது.”

புத்த மதம் பிறந்தது இந்தியாவில்தான் என்றாலும், அது பிறந்த நாட்டில் செல்வாக்கின்றி மருகியது. அதே வேளையில், தென் கிழக்காசிய நாடுகளில் தழைத்தோங்கியது. எனவே, வெளிநாட்டுச் செல்வாக்கால் இந்த மதத்துக்கு மாறினீர்களா என்று சிலர் கேட்கக்கூடும் என்பதை ஊகித்து, “இந்தப் புதிய மதத்துக்கு ஆதரவு காட்டும் விதத்தில் உதவிகள் செய்யுங்கள் என்று அந்நியர்களைக் கேட்க மாட்டேன். மற்றவர்கள் பணம் கொடுப்பார்கள் அல்லது கொடுக்காமல் இருப்பார்கள். ஆனால், இந்நாட்டு மக்கள் மீது நான் நம்பிக்கை வைக்கிறேன்” என்று பேசியிருக்கிறார். “உங்களுடைய வருமானத்திலிருந்து 5%-ஐ சமூகப் பணிக்கும் புதிய மதத்துக்கும் கொடுப்பது என்று நீங்கள் முடிவுசெய்தால், இந்தப் புதிய மதமானது இந்த நாட்டை மட்டுமல்ல, உலகம் முழுவதையுமே உயர்த்திவிடும்” என்று பேசியிருக்கிறார்.

அக்டோபர் 14 ஏன்?

புத்த மதத்துக்கு மாற அக்டோபர் 14-ஐ ஏன் தேர்வுசெய்தார் என்ற கேள்வி எழுகிறது. அது ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாள் என்பதால் தன்னுடைய ஆதரவாளர்களால் எளிதில் வர முடியும் என்று தீர்மானித்தாரா? இந்து மத நம்பிக்கைகள்படி விஜய தசமி என்பது தீமையை நன்மை வெற்றி கண்ட நாள். சாதிப் பாகுபாட்டையும் தீண்டாமையையும் கடைப்பிடிக்கும் தீமைகள் நிறைந்த இந்து மதத்தை வெற்றி காண பெளத்தமே சிறந்தது என்பதை அடையாளப்படுத்த அந்த நாளைத் தீர்மானித்தாரா? இந்துக்களால் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட தங்களுடைய மக்களுக்கு மத அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற நாள் என்ற அடையாளத்துக்காக அந்நாளைத் தேர்ந்தெடுத்தாரா என்ற கேள்விகள் எழுகின்றன. அம்பேத்கருக்கு நெருக்கமான வட்டாரங்கள்கூட இதற்கு விளக்கம் தரவில்லை.

புத்த மதத்தில் சேர்ந்த அடுத்த ஏழாவது வாரத்தில் அம்பேத்கர் காலமானார். ஒருவேளை, அம்பேத்கர் மேலும் சில ஆண்டுகள் நல்ல ஆரோக் கியத்துடன் வாழ்ந்திருந்திருந்தால் என்னவாகி யிருக்கும்? இன்னும் ஒரு பத்தாண்டுகள் அவர் வாழ்ந்திருந்தால் அவருடைய பேச்சு, எழுத்து, செயல்பாடுகள் காரணமாக ஈர்க்கப்பட்டு மேலும் பல லட்சம் ஒடுக்கப்பட்ட மக்கள் புத்த மதத்தைத் தழுவியிருப்பார்கள். லட்சக்கணக்கில் அல்ல, பல லட்சக்கணக்கில் மக்கள் புத்த மதத்துக்கு மாறத் தொடங்கியிருந்தால், அது இந்தியாவின் சமூக, அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டிருக்கும்.

மதம் மாறிய சில வாரங்களுக்கெல்லாம் அம்பேத்கர் மறைந்ததுதான் பெரிய சோகம். அவர் மேலும் பத்து அல்லது பதினைந்து ஆண்டு கள் வாழ்ந்திருந்து கோடிக்கணக்கான இந்தியர்களை பெளத்தத்தின் பக்கம் ஈர்த்திருந்தால் சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்து மதமே மேலும் சீர்திருந்தி, சாதிரீதியிலான ஏற்றத் தாழ்வுகளைக் கைவிடவும், கண்மூடித்தனமான பல பழக்கங்கள் மண்மூடிப் போகவும்கூட வழியேற்பட்டிருக்கும். இந்திய மக்களை உய்விக்க வந்த மாபெரும் சீர்திருத்தவாதியின் மறைவால், இந்துக்களான நாம் மீண்டும் பழைய, சாதியக் கண்ணோட்டம் மிக்க பாரபட்சமான மனநிலையிலேயே உறைந்துவிட்டோம்.

எழுத்து : ராமசந்திர குஹா
தமிழில் சுருக்கமாக: சாரி

அம்பேத்கர் மதம் மாறிய நிகழ்வின் 60-வது ஆண்டுNo comments:

Post a Comment