Wednesday, 19 October 2016

தாய் மதம் திரும்பிய 50 மருத்துவர்கள்

தாய் மதம் திரும்பிய 50 மருத்துவர்கள்

16 அக்டோபர் 2016 பௌத்தத்தின் எழுச்சி வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும் என்றால் மிகையில்லை.

"மக்கள் மருத்துவர்கள்" என்ற அமைப்பு சுமார் 5 மாதங்களுக்கு முன் 8 பேர் கொண்ட மருத்துவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. தகவல் தொடர்பு வசதிகளினால் இப்போது 400 மருத்துவர்களுக்கு மேலாய் ஒன்றிணைந்துள்ளனர்.  

அவர்களின் பல விவாதங்களுக்கு பிறகு, அண்ணல் அம்பேத்கரின் வழியில் தீண்டாமையிலிருந்து விடுபட தாய் மதமான பௌத்தம் திரும்புவதே சரியான வழி என்று முடிவெடுத்து 48 மருத்துவர்கள் தங்கள் குடும்பத்துடன் ( மனைவி, பிள்ளைகள் ) பௌத்தமேற்க்கும் நிகழ்வை 16 அக்டோபர் 2016 அன்று நிகழ்த்துவதாய் முடிவெடுத்தனர்.

அதன்படி நிகழ்ச்சி கிட்டத்தட்ட 09:30 மணியளவில் தொடங்கியது.
மேடையை பேராசிரியர் பி.டி.சத்யபால், தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன், பௌத்த துறவி வெண் தம்மனாக், மருத்துவர் ஜெயராமன் ஆகியோர் அலங்கரித்தனர்.

மக்கள் மருத்துவக் குழு பற்றிய சிறு  விளக்கத்திற்குப் பின், பேராசிரியர் பி.டி.சத்யபாலின் உரை அரங்கேறியது.   அவரின் சிறப்பான உரையிலிருந்து சில :

*அண்ணல் அம்பேத்கர் அவரின் பௌத்தமேற்புக்கு பின்னரே பௌத்தமதத்தைப் பின்பற்றினார் என்று கூறுவது முறையல்ல.  மாறாக அவர் வெகு காலமாக பௌத்தத்தை தன்னுடைய தனி வாழ்வில் பின்பற்றினார்.  

*அண்ணலுக்கு பௌத்தம் அறிமுகமாகியது அவருடைய 10ம் வகுப்பு வெற்றி விழாவின் போது.  
அந்நிகழ்விற்கு தலைமையேற்ற தாதா கெலுஸ்கர்  அவருக்கு பௌத்தரைப் பற்றிய  அவறெழுதிய புத்தகத்தைப் பரிசளித்தார். 

*அதன் மூலம் பௌத்தர் அறிமுகமானார் அண்ணல் அம்பேத்கருக்கு.    
அதற்கு பின் தொடர்ந்து பௌத்தத்தைப் பற்றி தொடர்ந்து ஆராய்ந்து கொண்டும் தன தனிவாழ்வில் பௌத்தத்தை கடைப்பிடக்கவும் ஆரம்பித்தார். 

*சென்னையில் ஒரு கூட்டத்தில் அயோத்திதாசர் கட்டிய 17 கோவில்களை பற்றி வினவினார். 
என்று பல செய்திகளைப் பகிர்ந்தார்.

உணவு இடைவேளைக்குப் பின், பௌத்தம் பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.அதன் பின், நிகழ்ச்சியின் முத்தாய்ப்பான மூன்று நிகழ்வுகள் நடந்தேறின.

அண்ணல் அம்பேத்கரின் பௌத்தமேற்பு பற்றிய 6 உரைகள் அடங்கிய புத்தகத்தை "நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்" என்று தலைப்பிட்டு தலித் முரசு வெளியிட்டது.

நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன் 


விழாக் குழுவின் பங்களிப்பால் ரூ.150/- விலையிலான அப்புத்தகம் ரூ.50/- க்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் கிட்டத்தட்ட 72 நபர்கள் பௌத்தம் ஏற்கும் நிகழ்வு நடந்தேறியது.

அதன் பிறகு பாபாசாகேப் டாக்டர்.அம்பேட்கரின் எழுத்துக்களை தமிழல் படிக்கும் வண்ணம் மக்கள் மருத்துவர்கள்  குழுவால் உருவாக்கப்பட்ட ஆன்டிராய்டு ஆப்பான "BLUE BUDDHA" வெளியிடப்பட்டது. இதில் மொத்தமுள்ள 37 தொகுதிகளில் முதல்கட்டமாக 10 மட்டும் படிக்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒரு சமூகத்தில் கற்றறிந்த மருத்துவர்களின் செயல்கள் கூர்ந்து கவனிக்கப்படும்.  அவர்களின் இத்தகைய தாய் மதம் திரும்புதலால், ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்த அடித்தட்டு மக்களுக்கு பௌத்தத்தின் பால் கவனம் திரும்பும் என்றால் மிகையில்லை.  இந்த நிகழ்வின் மூலம் அது சாத்தியமாகும் என்றே எண்ணலாம்.

மேலும் இந்த நிகழ்வைப் பற்றிய செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது முதல் பக்கத்திலேயே செய்தியை வெளியிட்டு சிறப்பித்தமை கூடுதல் சிறப்பு.

அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசர் வழியே நம் மக்கள் மீண்டும் பௌத்தத்தை மீட்டெடுப்பர் என்பது நிதர்சனம்.இந்து மதத்தில் இருக்கும் வரை தீண்டாமை தொடரும். 

நமோ புத்தா

No comments:

Post a Comment