Friday, 16 December 2016

பௌத்த அறவியல்

பௌத்த அறவியல்
பௌத்த அறவியல்

"Anyone can go to heaven Just be Good" மற்றும் "A Life of Blessings" ஆகிய  இரு புத்தகங்களை பதிப்பித்து உலகம் முழுக்க பௌத்தத்தை பரப்பும் தம்ம சகோதரர் T.Y.Leeன் புத்தகங்களை நாகலோகா பவுண்டேஷனின் விருப்பத்திற்கிணங்க, தமிழ்நாடு பௌத்த சங்கத்தின் நிறுவனர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.  அவ்விரு புத்தகங்களின் தலைப்பு முறையே "விண்ணுலக வீடுபேற்றினை எவரும் அடையலாம் நல்லவராக இருங்கள் அது போதும்" & "மங்களகரமான வாழ்க்கை"

"விண்ணுலக வீடுபேற்றினை எவரும் அடையலாம் நல்லவராக இருங்கள் அது போதும்" என்ற முதல் நூலில், அடிப்படை பௌத்தம், கேள்வி பதில்கள்,  அன்றாட பயிற்சி அடிப்படை தியான பயிற்சி ஆகியவை உள்ளன.  

"மங்களகரமான வாழ்க்கை" என்ற நூலை, வளமான, அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான வழிகாட்டி என்றால் மிகையில்லை.  இதில் புத்தரது சிகாலோவாத சுத்தம், செல்வம் சேர்ப்பது எவ்வாறு? ( வியாக்கப்பஜ்ஜ சுத்தம் ), வீழ்ச்சியை தவிர்ப்பது எப்படி? ( பராபவ சுத்தம் ), மங்களகரமான வாழ்க்கை ( மங்கல சுத்தம் ) ஆகியவை பகிரப்பட்டுள்ளன.

பௌத்தத்தை புரிந்து கொண்டு அதன் படி வாழ என்னுவோருக்கு ஒரு நல்ல ஆரம்ப புத்தகமாக அமையும் இப்புத்தகம்.

இலவசமாய் பதிவிறக்கம் செய்து கொள்ள கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்.



Saturday, 10 December 2016

தியாகனூர் பௌத்த ஆலயமும் தியான மண்டபமும்

நடா புயலின் காரணமாய் சென்னை பள்ளிகள் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதும் சில காலமாக "தியாகனூர் தியான மண்டபம்"தனை நேரில் காண ஒரு வாய்ப்பு அமைந்தது.

சிறு மழைத்தூறல்களுடன் அருமையான வானிலை.  சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து "ஆறகளூர்" செல்லும் பேருந்தில் அமர்ந்து பயணிக்க ஆரம்பித்தோம்.

தியாகனூர் புத்தர் ஆலயம்  என்று நடத்துனரிடம் கேட்டவுடன் "அதுதான் ஸ்டாப்பிங்" என்று கூறினார்.  வானிலை மற்றும்  பேருந்தில் ஒலித்த பாடல்களை ரசித்தபடி பயணம் அருமையாய் அமைந்தது.



தியாகனூர் ஒரு ஏரிக்கரையில் மறுபக்கம் அமைந்திருந்தது.  பேருந்து நிறுத்தத்திற்கெதிரேயே பௌத்த ஆலயம்  இருந்தது.  அந்த ஆலயத்திற்க்கெதிரே ஓங்கி வளர்ந்த போதி மரம் இருக்கின்றது.  ஆலயத்தின் உள்ளே 6 அடி உயரமாய் பௌத்தர் அமர்ந்திருந்தார்.  மக்கள் விளக்கு ஏற்றி வருகின்றனர்.

அந்த ஆலயத்திற்கும் போதி மரத்திற்கும் இடையே போகும் சாலை வழியே நடந்து போனால் 10 முதல் 15 மணித்துளிகளில் பௌத்த தியான மண்டபம் உள்ளது.



சேலம் மாவட்ட ஆட்சியர் திரு.க.மகரபூஷணம் இ.ஆ.ப அவர்கள் இந்தப்பகுதிக்கு வளர்ச்சிப்பணிகளைப் பார்வையிட வருகையில் இந்த சிலையைப் பார்த்து அதைப்பற்றி ஆராய வரலாற்றாரிசிரியர்கள் போன்றோரின் உதவியை நாடுகையில் அந்த சிலை கி.பி. 5ம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கக் கூடும் என்று தெரிய வந்தது.

மேலும் தலைவாசல், ஆறகளூர் உள்ளடக்கிய பகுதி மகத நாடு என்றறியப்பட்டதாகவும், இப்பகுதியில் பௌத்தர்கள் வாழ்ந்து வந்தனர் என்றும் அறியப்பட்டது.

ஆகவே ஆட்சியர் இந்த சிலை இருந்த இடத்தில் ஒரு தியான மண்டபத்தை அமைத்து 28.06.2013ல் திறந்து வைத்தார்.

சென்னையிலிருந்து சேலத்திற்கு விழுப்புரம் வழியாக செல்லும் பேருந்துகளின் மூலம் தலைவாசலில் இறங்கி அங்கிருந்து ஆறகளூர் செல்லும் பேருந்துகளில் பயணித்தால் 5ம் நூற்றாண்டு பௌத்தனை தரிசிக்கலாம்.