Saturday, 10 December 2016

தியாகனூர் பௌத்த ஆலயமும் தியான மண்டபமும்

நடா புயலின் காரணமாய் சென்னை பள்ளிகள் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதும் சில காலமாக "தியாகனூர் தியான மண்டபம்"தனை நேரில் காண ஒரு வாய்ப்பு அமைந்தது.

சிறு மழைத்தூறல்களுடன் அருமையான வானிலை.  சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து "ஆறகளூர்" செல்லும் பேருந்தில் அமர்ந்து பயணிக்க ஆரம்பித்தோம்.

தியாகனூர் புத்தர் ஆலயம்  என்று நடத்துனரிடம் கேட்டவுடன் "அதுதான் ஸ்டாப்பிங்" என்று கூறினார்.  வானிலை மற்றும்  பேருந்தில் ஒலித்த பாடல்களை ரசித்தபடி பயணம் அருமையாய் அமைந்தது.



தியாகனூர் ஒரு ஏரிக்கரையில் மறுபக்கம் அமைந்திருந்தது.  பேருந்து நிறுத்தத்திற்கெதிரேயே பௌத்த ஆலயம்  இருந்தது.  அந்த ஆலயத்திற்க்கெதிரே ஓங்கி வளர்ந்த போதி மரம் இருக்கின்றது.  ஆலயத்தின் உள்ளே 6 அடி உயரமாய் பௌத்தர் அமர்ந்திருந்தார்.  மக்கள் விளக்கு ஏற்றி வருகின்றனர்.

அந்த ஆலயத்திற்கும் போதி மரத்திற்கும் இடையே போகும் சாலை வழியே நடந்து போனால் 10 முதல் 15 மணித்துளிகளில் பௌத்த தியான மண்டபம் உள்ளது.



சேலம் மாவட்ட ஆட்சியர் திரு.க.மகரபூஷணம் இ.ஆ.ப அவர்கள் இந்தப்பகுதிக்கு வளர்ச்சிப்பணிகளைப் பார்வையிட வருகையில் இந்த சிலையைப் பார்த்து அதைப்பற்றி ஆராய வரலாற்றாரிசிரியர்கள் போன்றோரின் உதவியை நாடுகையில் அந்த சிலை கி.பி. 5ம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கக் கூடும் என்று தெரிய வந்தது.

மேலும் தலைவாசல், ஆறகளூர் உள்ளடக்கிய பகுதி மகத நாடு என்றறியப்பட்டதாகவும், இப்பகுதியில் பௌத்தர்கள் வாழ்ந்து வந்தனர் என்றும் அறியப்பட்டது.

ஆகவே ஆட்சியர் இந்த சிலை இருந்த இடத்தில் ஒரு தியான மண்டபத்தை அமைத்து 28.06.2013ல் திறந்து வைத்தார்.

சென்னையிலிருந்து சேலத்திற்கு விழுப்புரம் வழியாக செல்லும் பேருந்துகளின் மூலம் தலைவாசலில் இறங்கி அங்கிருந்து ஆறகளூர் செல்லும் பேருந்துகளில் பயணித்தால் 5ம் நூற்றாண்டு பௌத்தனை தரிசிக்கலாம்.


No comments:

Post a Comment