22 உறுதிமொழிகள்டாக்டர் அம்பேத்கர் பத்து லட்சம் மக்களுடன் பவுத்தம் தழுவிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு 14-அக்டோபர்-1956 அன்று நடைபெற்றது.  இது தொடர்பான நிகழ்ச்சி நிரலின் முழு விவரமும் 'பிரபுத்த பாரத்' வார இழழில் வெளியிடப்பட்டது.  பவுத்தத்தை ஏற்பவர்கள் 19 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  டாக்டர் அம்பேத்கார் காலை எட்டு மணியளவில் மகாஸ்தவீர் பிக்கு சந்தரமணி முன்னிலையில் பௌத்தம் ஏற்றார்.  அன்று காலை 10 மணியளவில் அங்கு திரண்டிருந்த மக்களிடம், ' இந்து மதத்தை துறந்து பவுத்தத்தைத் தழுவ விரும்புவோர் எழுந்து நிறு என்னைத் தொடர்ந்து திரிசாரணையும் பஞ்சசீலத்தையும் சொல்ல வேண்டும்' என்று அம்பேத்கர் அறிவித்தார்.  இதைத் தொடர்ந்து அனைத்து மக்களும் எழுந்து நின்று அவ்வாறே செய்தனர்.  அதன் பிறகு அம்பேத்கார் அவர்கள் அனைவரையும் பின்வரும் 22 உறுதிமொழிகளையும் ஏற்கச் செய்தார். 
 1. நான் பிரம்மன், விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் ஆகிய கடவுளர்கள் மீது நம்பிக்கை வைக்க மாட்டேன், நான் அவர்களை வணங்கவும் மாட்டேன்.
 2. நான் ராமன் மற்றும் கிருஷ்ணன் மீது நம்பிக்கை வைக்க மாட்டேன், நான் அவர்களை வணங்கவும் மாட்டேன்.
 3. நான் கவுரி, கணபதி மற்றும் பிற இந்து ஆன் கடவுளர்கள் மீதோ, பெண் கடவுளர்கள் மீதோ நம்பிக்கை வைக்க மாட்டேன், நான் அவர்களை வணங்கவும் மாட்டேன்.
 4. நான் கடவுள் அவதாரக் கொள்கையை நம்பவில்லை.
 5. புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுவதை நான் நம்பவில்லை.  நம்பவும் மாட்டேன், இதை பொய்யான விஷமப் பிரச்சாரமாகக் கருதுகிறேன்.
 6. ஒருவர் இறந்தால் 'திதி' செய்யும் சடங்கையோ, 'பிண்டம்'வைக்கும் சடங்கையோ செய்ய மாட்டேன்.
 7. புத்தருடைய கொள்கைகள் மற்றும் அறிவுரைகளை எதிராக நான் ஒருபோதும் செயல்படமாட்டேன்.
 8. நான் பார்ப்பனர்களை வைத்து எவ்விதச் சடங்குகளையும் செய்யமாட்டேன்.
 9. அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்ற கொள்கையை நான் மேற்கொள்வேன்.
 10. நான் சமத்துவத்தை நிலைநாட்ட பெரும் முயற்சிகளை ஏற்றுக்கொள்கிறேன்.
 11. நான் புத்தர் வகுத்த எண் மார்க்கப் பாதையைப் பின்பற்றுவேன்.
 12. புத்தர் வகுத்த பத்து ஒழுக்கங்களை நான் கடைபிடிப்பேன்.
 13. நான் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி அவற்றை அக்கறையுடன் பராமரிப்பேன்.
 14. நான் திருட மாட்டேன்.
 15. நான் பொய் சொல்ல மாட்டேன்.
 16. கூடா ஒழுக்கமான பிறர்மனை விழைதலை முற்றிலும் தவிர்ப்பேன்.
 17. மனதை மயக்கச் செய்யும் பொருட்களை நான் உட்கொள்ள/அருந்த மாட்டேன்.
 18. பவுத்தத்தின் மூன்று கொள்கைகளான மெய்யறிவு, அறநெறி, வாஞ்சை ஆகியவற்றின்படி வாழ்வேன்.
 19. நான் பவுத்தத்தை தழுவுவதன் மூலம் - மனித இனம் செழித்தோங்குவதற்கு எதிரான, சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட, மனிதர்களை இழிவாக நடத்துகிற - இந்து மதத்தை இன்றோடு விட்டொழிக்கின்றேன்.
 20. பவுத்த தம்மம் ஒன்றே மேன்மையான அறநெறி என்று உறுதியாக நம்புகிறேன்.
 21. நான் புதியதொரு வாழ்க்கைக்குள் நுழைவதாக நம்புகிறேன்.
 22. நான் இனி புத்தரின் கோட்பாடுகளைப் பின்பற்றி, என் வாழ்க்கையைத் தொடருவேன் என்று உளமார உறுதி செய்கிறேன்.